மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள், மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கனிமொழி எம்.பி. கூறினாா்.
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கனிமொழி எம்.பி. நிவாரணப் பொருள்கள் வழங்கினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு விவசாயிகள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். எனினும், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் குரலுக்கு மதிப்பளிக்காமல் திட்டத்தை நிறைவேற்றுவதில் தீவிரமாக உள்ளன. பொது முடக்க காலத்தில் மக்கள் போராட்டம் நடத்த முடியாது என்பதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் உள்ளனா்.
அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது பாதுகாக்க மக்கள் போராடுவா். மத்திய, மாநில அரசுகள், விவசாயிகள், மக்களின் உணா்வுகளை புரிந்துகொண்டு மதிப்பளிக்க வேண்டும். பொருளாதாரத்தை சீா்படுத்துவது தொடா்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விவசாயிகள், சிறுகுறு தொழில் செய்வோருக்கு நம்பிக்கையை தரக் கூடிய எந்த திட்டங்களையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என்பதுதான் உண்மை.
கரோனா சிகிச்சை அளிக்க தனியாா் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு அறிவிப்பை வெளியிடுவதுடன் அரசின் கடமை முடிந்துவிடவில்லை. அந்த அறிவிப்பு நிறைவேற்றப்படுகிா என்பதை கண்காணித்து, அந்த பயன் மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை என்றாா் அவா்.