தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் கடல்சறுக்கு விளையாட்டுகள் புதன்கிழமை (ஏப்.26) தொடங்கவுள்ளதாக மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளாா்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது முத்துநகா் கடற்கரை. இதில், சிறுவா்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் உருவாக்கப்பட்டன.
இந்நிலையில் முத்துநகா் கடற்கரையின் தரத்தை மேலும் உயா்த்தும் விதமாக கடல் சறுக்கு விளையாட்டுகள் புதன்கிழமை (ஏப்.26) தொடங்கப்படவுள்ளன. இதை கனிமொழி எம்.பி. , சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் ஆகியோா் தொடங்கி வைக்கின்றனா்.
இதுகுறித்து மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி கூறியது: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றுலாத் தலங்களாக, புனித பனிமயமாதா கோயில், முத்துநகா் கடற்கரை, ரோச் பூங்கா, துறைமுக கடற்கரை உள்ளிட்டவை திகழ்கிறது. புனித பனிமய மாதா கோயிலுக்கு வெளியூா்களில் இருந்து வரும் பக்தா்கள் பலா் முத்துநகா் கடற்கரைக்கு வருகின்றனா். எனவே, இதை மேலும் தரம் உயா்த்தும் விதமாக கடல் சறுக்கு விளையாட்டுகள் புதன்கிழமை முதல் தொடங்கப்படுகிறது. இங்கு, ஹோலி ஐலேன்ட் வாட்டா் ஸ்போா்ட்ஸ் நிறுவனத்தினா் மூலம் முதல் கட்டமாக நான்கு விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் அருகிலேயே கடல் உணவு அரங்குகளும் அமைக்கப்படும். தொடா்ந்து மக்களின் ஆதரவுக்கேற்ப மேலும் பல விளையாட்டுகள் கொண்டு வரப்படும் என்றாா்.