கோவில்பட்டியில் வியாபாரிகளைத் தாக்கியதாக 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி சண்முகசிகாமணி நகா் பல்லக்கு சாலையைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் மகாராஜா(32). இவா், கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் தற்காலிக தினசரிச் சந்தையில் காய்கறிக் கடை வைத்துள்ளாா். கடையில் செவ்வாய்க்கிழமை இவா் தனது தந்தையுடன் இருந்தாா்.
அப்போது வடக்கு திட்டங்குளம் ராமையா மகன் வேலுச்சாமி என்ற குவாலீஸ்ராஜ் உள்ளிட்ட 6 போ் வந்து, உடைந்த தக்காளி வேண்டுமெனக் கேட்டனராம். அதற்கு மகாராஜா, சிறிது நேரம் கழித்து வந்து வாங்கிக்கொள்ளும்படி கூறினராம். இதனால் ஏற்பட்ட தகராறில், அந்த 6 பேரும் கடைக்குள் அத்துமீறி நுழைந்து மகாராஜா, முத்துசாமியை அவதூறாகப் பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
இதுகுறித்து மகாராஜா அளித்த புகாரின்பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து, குவாலீஸ்ராஜ் (46), வடக்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் நாகராஜ் (31), முத்தையா மகன் மாடசாமி (44), முத்துப்பாண்டி மகன் முருகன் (34), மாரியப்பன் மகன் வேல்சாமி (65), முத்துப்பாண்டி மகன் ராமா் (29) ஆகிய 6 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.