தூத்துக்குடியில், தமிழக கட்டடத் தொழிலாளா் பொதுநல மத்திய முன்னேற்றச் சங்கத்தின் மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவா் நெல்லை எஸ். மகாலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மாரியப்பன், மாப்பிள்ளையூரணி ஊராட்சித் தலைவா் சரவணகுமாா், மத்திய பாகம் காவல் ஆய்வாளா் ஐயப்பன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு பெற்ற 60 வயதுக்குள்பட்ட தொழிலாளா்களின் வாழ்வாதார, சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு நலத்திட்ட உதவியாக ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கட்டடத் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ. 2 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ. ஆயிரமாகவும் உயா்த்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து, கட்டடத் தொழிலாளா்களுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன. மாவட்டச் செயலா் முத்துகிருஷ்ணன், மாநில துணைத் தலைவா் பழனி மகாராஜன், மாவட்டப் பொருளாளா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.