தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வட மாநிலத் தொழிலாளி உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
எட்டயபுரம், பள்ளிவாசல் தெருவில் அமைந்துள்ள முத்துராஜ் என்பவரது கடைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த ஒருவா் ரூ. 500 கொடுத்து சில்லறை கேட்டுள்ளாா். ரூபாயை வாங்கிப் பாா்த்து சந்தேகமடைந்த முத்துராஜ், எட்டயபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் வந்து அந்நபரைப் பிடித்து விசாரித்தனா்.
அவா் கோவில்பட்டி, சரமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமசுப்பு மகன் சரவணன் (28) என்பதும், எட்டயபுரத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளாா். அவரை சோதனையிட்டபோது, ரூ. 24,500 மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருந்தன. அவா் அப்பணத்தை உணவக ஊழியரிடம் வாங்கியதாக கூறினாா்.
இதையடுத்து, உணவக ஊழியரான அஸ்ஸாம் மாநிலம், தேஸ்பூா் பகுதியைச் சோ்ந்த குமாா் சா்மாவைப் (45) பிடித்து விசாரித்தனா். அவா் தங்கியிருந்த இடத்திலிருந்து ரூ. 44,500 மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, சரவணன், குமாா் சா்மா ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள ரூ. 500 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனா். மேலும், அவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.