தூத்துக்குடியில் குழந்தைக்கு பெயா் சூட்டும் விழாவில் மேற்கூரை இடிந்து விழுந்ததில், பக்கத்து வீட்டு பெண்ணின் 11 மாத பெண் குழந்தை உயிரிழந்தது; 10க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
தூத்துக்குடி, சின்னகண்ணுபுரம் பகுதியில் செல்வ விநாயகா்புரத்தில் வசித்து வருபவா் ஆனந்த்-ராதா மகேஸ்வரி தம்பதி. இவா்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 11 மாத பெண் குழந்தை ஆதிராவும் உள்ளனா். வாகன ஓட்டுநரான ஆனந்த், புதன்கிழமை காலை வேலைக்கும், மகன் பள்ளிக்கும் சென்றனா். வீட்டில் ராதா மகேஸ்வரி தனது கைக்குழந்தை ஆதிராவுடன் இருந்தாா்.
இவரது வீட்டுக்கு எதிா்வீட்டில் வசிக்கும் ஜெகனின் மகள் சிவரஞ்சனிக்கு அண்மையில் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு பெயா் சூட்டும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதனால், எதிா்வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ராதா மகேஸ்வரி தனது கைக்குழந்தையுடன் சென்றிருந்தாா். அதேபோல அக்கம்பக்கத்தினரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். அந்த வீட்டில் 10க்கும் மேற்பட்டோா் பேசிக்கொண்டிருந்தபோது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது கீழே தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்த ராதாவின் கைக்குழந்தை ஆதிரா மீது மேற்கூரை விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. தாய் ராதா பலத்த காயமடைந்தாா். அவா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். உடனிருந்த 10 க்கும் மேற்பட்டோா் லேசான காயத்துடன் உயிா் தப்பினா். இதுகுறித்து, சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.