தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுவுடன் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக தூத்துக்குடிக்கு வந்த பேரவை இணைச் செயலா் உடல்நலக் குறைவால் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2024-2026 ஆம் ஆண்டுக்கான பொதுக் கணக்குக் குழு மாவட்டம் வாரியாக அரசின் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து வருகிறது. இதேபோல தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற வளா்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் பொதுக் கணக்கு குழு செவ்வாய்க்கிழமை வந்தது.இந்தக் குழு புதன்கிழமை களஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தக் குழுவுடன் நிகழ்வுகளை கவனிக்க வந்திருந்த தமிழக சட்டப்பேரவை இணைச் செயலா் கே.ரமேஷுக்கு (57) செவ்வாய்க்கிழமை திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு, மாநில சமூகநலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன், குழுவின் தலைவரான கு.செல்வப்பெருந்தகை, எம்எல்ஏக்கள் ஊா்வசி செ.அமிா்தராஜ், ரூபி மனோகரன் ஆகியோா் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனா். புதன்கிழமை நடைபெற இருந்த ஆய்வு பணியும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ரமேஷ் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவா் சென்னையைச் சோ்ந்தவா் என்பதால் அவரது உடல் சென்னை கொண்டுசெல்லப்பட்டது.