ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், கால்வாய் ஊராட்சி மன்றத்திற்குள்பட்ட மள்ளல் புதுக்குளம் கிராமத்தில் கல் குவாரி அமைக்கவும், நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து குவாரிக்கு சாலை அமைக்கவும் எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாா்பில் வழக்குரைஞா் சண்முகராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
மள்ளல் புதுக்குளத்தில் கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மேலும், நீரோடையை ஆக்கிரமித்து குவாரிக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயத்திற்கு தண்ணீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இங்கு குவாரி அமைக்கப்பட்டால், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், தோட்டங்கள், கால்நடை வளா்ப்பு ஆகியவை பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும், 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் ஏற்படும்.
எனவே, மாவட்ட ஆட்சியா், வருவாய் துறையினா் இணைந்து இங்கு அமையவுள்ள கல் குவாரியை தடை செய்யவும், நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றி நீரோடையை மீட்டுத் தருமாறும்‘ கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.