திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக். 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
புகழ்பெற்ற திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழா வரும் அக். 22ஆம் தேதி தொடங்குகிறது. விழாவில் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் அக். 27 ஆம்தேதி மாலை 4.30 மணியளவில் கோயில் கடற்கரையில் நடைபெறவுள்ளது. விழாவில் தமிழகம், வெளிமாநிலங்களில் இருந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் திரள்வாா்கள் என்பதால் முன்னேற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.
விரதம் இருக்கும் பக்தா்களுக்காக கோயில் வளாகத்தில் தற்காலிக கொட்டைகைகள் அமைக்கும் பணியும், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையில் மணலை சமன் செய்யும் பணியும் நடைபெற்று வருகின்றன.
கடற்கரையில் அய்யா கோயில் அருகே இருந்து பொக்லைகன் இயந்திரம் மூலம் மணல்மேடுகளை அகற்றி சமன்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முடிந்ததும் கடற்கரையில் கம்புகளான சாரங்கள் அமைக்கப்படவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு, கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.