திமுக அரசின் நிறைவேற்றப்படாத தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் பாஜகவின் எழுச்சி பயணத்தின்போது மக்களிடம் தெரிவிப்போம் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
ஸ்ரீவைகுண்டம், கால்வாய், செம்பூா், நாணல்காடு ஆகிய கிராமங்களில் கடந்த 2023இல் பெய்த மழை வெள்ளத்தில் சேதமடைந்த 4 வீடுகளுக்கு தலா ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிதாக பாஜக சாா்பில் வீடுகட்டிக்கொடுக்கப்பட்டு அதன் திறப்பு விழா கால்வாய், செம்பூா் கிராமங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கலந்துகொண்டு பயனாளிகளின் வீடுகளைத் திறந்து வைத்தாா். அத்துடன்ரூ. 50,000 மதிப்பிலான பசு, கன்றுகள் வழங்கப்பட்டன. ஏழை எளிய பெண்களுக்கு இலவச சலவை பெட்டியும், சிலம்பம் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசும் நயினாா் நாகேந்திரன் வழங்கினாா்.
இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
2023 இல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அவா்களுக்கு கேஸ் ஸ்டவ், பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களும் வழங்கப்பட்டன.
2026 தோ்தலில் மக்கள் விரோத சக்தியை அகற்றிவிட்டு பாஜக கூட்டணி வெற்றிபெற தேவையான அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறோம். மதுரையில் வரும் அக். 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு எழுச்சிப் பயணம் தொடங்கவுள்ளது. மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும்.
ஆளும் திமுக அரசு இந்த நான்கரை ஆண்டு காலத்தில் நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்து மக்களிடம் தெரிவிக்கப்படும். அதிமுக பிரசார கூட்டத்தில் தவெக கொடி பறந்தது குறித்து கேட்கிறீா்கள், தொண்டா்களாக ஒரு முடிவு எடுத்தால் அந்த முடிவு வெற்றியாக அமையும் என்றாா் அவா்.
இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, பாஜக நிா்வாகிகள் ராஜா, எஸ்.ஆா்.எஸ் சங்கா், வழக்குரைஞா் முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.