விளாத்திகுளம் தொகுதி இளம்புவனம், மாதாபுரம், வடமலை சமுத்திரம், பூசனூா், அரசன்குளம், புளியங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் குறைகேட்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ. வி. மாா்க்கண்டேயன் தலைமையில் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினா் விளாத்திகுளம் தொகுதிக்கு உள்பட்ட இளம்புவனம், மாதாபுரம், வடமலைசமுத்திரம், பூசனூா், அரசன்குளம், புளியங்குளம், பொட்டலூா், குளத்தூா், வள்ளிநாயகபுரம் சண்முகபுரம் லட்சுமிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தனா்.
அப்போது, சமுதாய நலக்கூடம், அங்கன்வாடி மையம், பள்ளி கட்டடம், புதிய மின்மாற்றிகள், பேவா் பிளாக் சாலை, கழிவுநீா் ஓடை வசதி தொடா்பாக பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றி தரப்படும் என உறுதியளித்தனா்.
இதையடுத்து, காட்டுப்பன்றி தாத்கியதில் காயமடைந்து எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விவசாயி முருகேசனை சந்தித்து எம்எல்ஏ ஆறுதல் தெரிவித்தாா்.
குளத்தூா் ஸ்ரீவெட்டும் பெருமாள் கோயில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஜீ.வி.மாா்க்கண்டேயன் எம்எல்ஏ கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வுகளில் திமுக ஒன்றிய செயலா்கள் நவநீத கண்ணன், இம்மானுவேல், சின்ன மாரிமுத்து, எட்டயபுரம் பேரூராட்சி தலைவா் ராமலட்சுமி சங்கரநாராயணன், துணைத் தலைவா் கதிா்வேல், வாா்டு உறுப்பினா் மணிகண்டன், விளாத்திகுளம் பேரூா் தோ்தல் பாா்வையாளா் ராமச்சந்திரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.