தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 72 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3.86 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்து,பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவசவீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 436 கோரிக்கை மனுக்களை பெற்றாா்.
பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
முன்னதாக, மாற்றுத் திறனாளிகளை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 மனுக்களை பெற்ற ஆட்சியா், தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்த விண்ணப்பதாரா்களுக்கு தலா ரூ.3,285 மதிப்பில் 60 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 100 மதிப்பிலான காதொலிக் கருவிகளையும், தலா ரூ.15,750 மதிப்பில் 12 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகள் என மொத்தம் 72 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 86 ஆயிரத்து 100 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
மேலும், தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள ஒரு மாற்றுத் திறனாளிக்கு தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டையையும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தமிழரசி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் பிரம்மநாயகம் மற்றும் அனைத்துத் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.