தூத்துக்குடி மாவட்டத்தில், கலைஞா் கனவு இல்லத் திட்ட பயனாளிகள் வீடுகள் கட்ட ஏதுவாக, கடன் வழங்கும் சிறப்பு முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் 2025-26ஆம் ஆண்டு மொத்தம் 1,700 பயனாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக, ரூ.1 லட்சம் பயனாளிகளுக்கு கடன் வழங்கும் வகையில், வட்டார அளவிலான சிறப்பு முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அன்று காலை 10 மணிக்கு மண்டல அலுவலா்கள் தலைமையில் இம்முகாம் நடைபெறும். முகாமுக்கு, மனுதாரா்கள் விண்ணப்பிக்க வருகையில் ஜாமீன்தாரா்கள் இருவரை அழைத்து வரவேண்டும். அப்போது, கலைஞா் கனவு இல்லம் ஒதுக்கீட்டு ஆணை அசல், மனுதாரா் புகைப்படம் -3, மனுதாரா் மற்றும் 2 ஜாமீன்தாரா்களின் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை நகல்கள், மனுதாரரின் பான் காா்டு நகல், சாதிச் சான்றிதழ் நகல் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.
சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் இந்த கடன் வழங்கும் முகாமில் பயனாளிகள் கலந்துகொண்டு, அன்றையதினம் ஆஜராகி பணியிலிருக்கும் வங்கிப் பணியாளா்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியப் பணியாளா்களை தொடா்பு கொண்டு பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.