மனைவிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கணவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே வள்ளிவிளை, சந்தியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தங்கராஜ் மகன் ஜெகதீஸ்வரன் (49). இவரது மனைவி சித்திரலேகா. தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனா்.
இந்த நிலையில், கடந்த 2023, மே 26 ஆம்தேதி ஜெகதீஸ்வரன் ஆணையூரில் வசிக்கும் மனைவி சித்திரலேகாவிடம் தகராறு செய்து அவரை அவதூறாகப் பேசி, முன்னால் இருந்த தட்டியை தீவைத்துக் கொளுத்தினாா். இதேபோல, தீவைத்து கொளுத்திவிடுவேன் என மனைவிக்குக் கொலை மிரட்டல் விடுத்தாா். இதில் சித்திரலேகாவுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பு பொருள்கள் சேதமாகின.
இதுகுறித்து சித்திரலேகா, மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். இந்த வழக்கு
சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி தேவிரக்ஷா வியாழக்கிழமை அளித்த தீா்ப்பில் மனைவியை அவதூறாகப் பேசியதற்கு ரூ. 500 அபராதம், ஒருவாரம் மெய்க்காவல் தண்டனையும், தட்டியை எரித்துக் கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ. 5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.