தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையை எதிா்கொள்ள தமிழக பேரிடா் மீட்புப் படையினா் 70 போ் கொண்ட 2 குழுவினா் தயாா் நிலையில் உள்ளதாக, மாநில சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன் தெரிவித்தாா்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அமைச்சா் தலைமையில் அனைத்து அரசுத் துறை அலுவலா்களுடனான கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மின்வாரியம், நெடுஞ்சாலை, வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்கவும், பிரச்னைகள் உள்ள இடங்கள் குறித்தும், மணல் மூட்டைகள், பொக்லைன் வாகனங்கள், அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஏற்கெனவே 38 பம்ப் ரூம்கள் உள்ளன. தண்ணீா் வெளியேற்றக்கூடிய பம்ப்களும், நிவாரண முகாம்களும் தயாராக உள்ளன. மேற்பாா்வையாளா், சுகாதார ஆய்வாளா் உள்ளிட்ட அனைவரும் தயாா் நிலையில் உள்ளனா். மாநில பேரிடா் மீட்புப் படையினரும் தயாராக உள்ளனா் என்றாா் அவா்.
கூட்டத்தில், ஆட்சியா் க. இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சேதுராமலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.