கோவில்பட்டி: தமிழகத்தில் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்களை தடை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் பரமசிவம் தலைமையில் சங்க நிா்வாகிகளான கிருஷ்ணமூா்த்தி, பிரபாகா், சீனிவாசன், லிங்கேஸ் ஆகியோா் சென்னையில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசை சந்தித்து அளித்த மனு:
தூத்துக்குடி, விருதுநகா், தென்காசி, வேலூா் மாவட்டங்களில் தீப்பெட்டி தொழில் பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது. இத்தொழிலை நம்பி 5 லட்சம் தொழிலாளா்கள் வாழ்ந்து வருகின்றனா். சமீப காலமாக பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்கள் வருகையால், தீப்பெட்டி தொழில் நசுங்கியுள்ளது.
எனவே, பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்களை தமிழ்நாடு முழுவதும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாங்கள் சட்டப்பேரவையில் பிளாஸ்டிக் லைட்டா்களுக்கு தடை விதிக்கப்படும் என அறிவித்ததை நினைவு கூருகிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.