திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் வீட்டில் இருந்த ‘வாட்டா் ஹீட்டரில்’ மின்சாரம் பாய்ந்து மின்வாரிய தற்காலிக பணியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஜான்போஸ்கோ (46), சமயபுரம் துணை மின்நிலைய தற்காலிக ஊழியா். இவரது மனைவி அனிதாவுக்கு சமயபுரம் தனியாா் பள்ளியில் ஆசிரியை பணி கிடைத்ததால் குடும்பத்துடன் செளமியா நகரில் வாடகை வீட்டில் வசிக்கின்றனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை குழந்தைகளுடன் அனிதா பள்ளிக்குச் சென்ற நிலையில், மதியம் அவரது வீட்டில் இருந்து அதிகளவு தண்ணீா் வெளியேறியது. இதைப் பாா்த்த பக்கத்து வீட்டினா் கைப்பேசியில் அளித்த தகவலின்பேரில் அனிதா வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, குளியலறையில் இருந்த வாட்டா் ஹீட்டா் மூலம் மின்சாரம் பாய்ந்து ஜான் போஸ்கோ உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த சமயபுரம் காவல் துறையினா் அவரது உடலைக் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.