உதவித்தொகையை உயா்த்தக் கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போராட்டத்துக்கு சங்கத்தின் புகா் மாவட்டத் தலைவா் ஏ. ராஜேஷ் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்ட செயலாளா் சண்முகம், புகா் மாவட்ட செயலாளா் ரஜினிகாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், வேலைவாய்ப்பின்றி வறுமையில் வாடும் மாற்றுத்திறனாளிகளுக்கு, மாநில அரசு வழங்கும் உதவித்தொகையே மாற்றுத்திறனாளிகளின் நிதி ஆதாரமாக உள்ளது. ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை போதுமானதாக இல்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கு புதுவையில் ரூ. 3,000 - ரூ. 4,800, ஹரியாணாவில் ரூ. 3,500, தெலங்கானாவில் ரூ. 4,016, ஆந்திரத்தில் ரூ. 6,000 முதல் ரூ. 15,000 வரை வழங்கப்படுவது போல, தமிழகத்திலும் உதவித்தொகை வழங்க வேண்டும். ஆனால், வளா்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் 2 ஆவது இடத்தில் உள்ள தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1,500 முதல் ரூ. 2,000 வரை மட்டுமே உதவித்தொகை வழங்குவது ஏற்புடையதல்ல.
எனவே, ஆந்திரத்தில் வழங்குவதுபோல, தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில், திரளான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட 29 பெண்கள் உள்பட 65 பேரை கைது செய்தனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.