அரியலூர் மாவட்டம் பொன்னேரியில் வண்டல் மண் எடுக்க வியாழக்கிழமை (ஜூன் 15) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உடையார்பாளையம் வட்டம், பிச்சனூர், குருவாலப்பர்கோவில், உட்கோட்டை மற்றும் ஆமணக்கந்தோண்டி ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள பொன்னேரியில் 4,86,150 கனமீட்டர் அளவிற்கு வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்வதற்கு அறிவிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
வண்டல் மண் எடுத்துக்கொள்ள 20 நாள்களுக்கு மிகாமல் அனுமதி வழங்கப்படும். 1 ஏக்கர் விவசாய புன்செய் நிலங்களுக்கு 90 கனமீட்டரும், நன்செய் நிலங்களுக்கு 75 கனமீட்டரும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும். சொந்த வீட்டு உபயோகப் பணிகளுக்கு 30 கனமீட்டர் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மண்பாண்டம் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு 60 கனமீட்டர் மண் எடுக்க அனுமதியும் வழங்கப்படும். பொதுமக்கள் மண் எடுத்துக்கொள்ள கொண்டு வரும் வாகனங்களுக்கு பொதுப்பணித்துறையின் மூலம் மண் ஏற்றிவிடப்படும். அதற்கான தொகை ரூ. 35.20 பைசா 1 கனமீட்டருக்கு ஏற்றுக்கூலியாக செலுத்த வேண்டும்.
பொன்னேரியில் அதிக அளவில் வண்டல் மண் எடுத்துக்கொள்வதற்கு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற ஏதுவாக, ஜயங்கொண்டம் வட்டாட்சியர் தலைமையில் சிறப்பு முகாம் வியாழக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை ஆமணக்கந்தோண்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேலும் இந்த முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது. அப்போது பொதுமக்கள் விண்ணப்பம் அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் (பொ)எஸ். தனசேகரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.