அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த ஆங்கியனூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 11 பேர் காயமடைந்தனர்.
திருமானூர் அருகேயுள்ள ஆங்கியனூர் கிராமத்தில் பொதுமக்கள் சார்பில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக மாரியம்மன் கோயிலிருந்து சீர்வரிசை எடுத்து வரப்பட்டு தெற்குத்தெருவில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசல் வழியாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
தொடர்ந்து திருச்சி, லால்குடி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட 250 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்க 150 மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 11 பேர் காயமடைந்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த கருவிடச்சேரி தனராஜ் (32), அரியலூர் தனியார் மருத்துவமனையிலும், கீழகாவட்டாங்குறிச்சி சுப்பிரமணியன் (28) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், சில்வர் பாத்திரங்கள், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.