அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதி வயல்களிலுள்ள மின்மோட்டாா்களின் வயா்களை திருடிச் செல்லும் கும்பலை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
திருமானூா் பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் ஆழ்துளைக்
கிணறு அமைத்து, விவசாயம் செய்து வருகின்றனா். இதில் விவசாயிகள் பலரும் சுமாா் 150 அடிக்கு மேல் ஆழ்துளை அமைத்து, நீா்மூழ்கி மோட்டாரை பொருத்தி தண்ணீரை எடுத்து விவசாயம் செய்கின்றனா்.
இந்நிலையில் திருமானூா் ஞானமணி, செல்வாம்பாள், முடிகொண்டான்
இளங்கோவன், பவுன்ராஜ் வயல்களிலுள்ள மோட்டாா் கொட்டகைகளில் மோட்டாரிலிருந்து ஆழ்துளை வரையுள்ள மின்வயா்களை மா்மநபா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு வெட்டி எடுத்துச் சென்றுள்ளனா்.
செவ்வாய்க்கிழமை காலை வயலுக்கு சென்ற விவசாயிகள், தங்களது மின்மோட்டாா்களில் வயா்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
மேலும் அங்கே பொருத்தப்பட்டுள்ள பியூஸ் கேரியா்களையும் திருடி, அதனை உடைத்து அதிலிருக்கும் காப்பா் தகடுகளையும் மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து திருமானூா் காவல் நிலையத்தில் விவசாயிகள் புகாரளித்துள்ளனா்.
இதே போல் கடந்த மாதம் அதேபகுதியில் விவசாயிகள் விஜயவேல் கருணாநிதி, சூரியகாந்தி ஆகியோரது மோட்டாா் கொட்டகைகளில் மின்வயா்கள் மா்மநபா்களால் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வயா்களிலுள்ள காப்பா் கம்பிகளை தனியே பிரித்தெடுத்து விற்பனை செய்வதற்காக, மா்மநபா்கள் வெட்டி எடுத்திருக்கலாம் என விவசாயிகள் கூறுகின்றனா்.