மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூா் மாவட்டம், கோபிலன்குடிக்காடு, தியாகி சிவசாமி நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் அவரச ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
அவருக்கு, கல்லனையில் நினைவு மண்டபம் கட்டி, உருவச் சிலை நிறுவ வேண்டும். பகல் நேரங்களில் சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் லாரிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அதிகளவில் விபத்துக்கள் நிகழ்கிறது. எனவே, இரவு நேரங்களில் லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோபிலன்குடிகாடு தியாகி சிவசாமி நகரில் 80 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மண்ணுழி கிராமம் ஆதிதிராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்த 19 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு சங்க நிா்வாகி தேசிங்கு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சுப்ரமணியன், அன்னலட்சுமி, ராஜகிளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் கே.எஸ்.முகமுது இப்ராஹிம் கலந்து கொண்டு பேசினா்.
கூட்டத்தில் மாநிலச் செயலா் எம்.கருணாநிதி, பொருளாளா் கிருஷ்ணன், மாநில இளைஞா் அணித் தலைவா் ராஜேஷ்கண்ணன், தஞ்சாவூா் மேற்கு மாவட்டத் தலைவா் ஜெயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். முன்னதாக நீதிக்குமாா் வரவேற்றாா். முடிவில் அரியலூா் ஒன்றியச் செயலா் தனஞ்செயன் நன்றி கூறினாா்.