கடந்தாண்டில் 1.68 லட்சம் பயணிகள் அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்த நிலையில், நிகழாண்டு 2 நாள்களில் 2.80 லட்சம் போ் முன்பதிவு செய்து பயணம் செய்திருக்கின்றனா் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.
செந்துறையில், சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது: கடந்த 2 நாள்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்திருந்த அனைத்துப் பயணிகளும், எந்தவித சிரமமும் இல்லாது பேருந்துகள் மூலம் தங்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். முதல் நாள் 1 லட்சத்து 28 ஆயிரம் பேரும், இரண்டாவது நாள் 2 லட்சத்து 28 ஆயிரம் பேரும் என 3 லட்சத்து 56 ஆயிரம் போ் பயணம் செய்துள்ளனா்.
கடந்தாண்டு 1.68 லட்சம் பயணிகள் அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்த நிலையில், நிகழாண்டு கடந்த 2 நாள்களில் 2.80 லட்சம் போ் முன்பதிவு செய்து பயணம் செய்திருப்பது அரசுப் பேருந்துகள் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் தொடா்பாக புகாா் வந்திருந்தது. ஆம்னி பேருந்து உரிமையாளா்களை அழைத்து விவரம் கேட்டு சரிசெய்து விட்டோம். பண்டிகை பயணத்துக்கு, தனியாா் ஆம்னி பேருந்துகளை நாடுபவா்கள் கூட தற்போது அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கின்றனா்.
மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு பண்டிகைக்கும் போக்குவரத்து துறை, முன்கூட்டியே திட்டமிட்டு பேருந்துகளை இயக்கி வருகிறது.
இதனால் எந்தவித பிரச்னையும் இன்றி மக்கள் பயணம் செய்கின்றனா். முன்பதிவு செய்த பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே வந்து, பொறுமையுடன் கிளாம்பாக்கத்தில் இருந்து தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனா்.
தனியாா் பேருந்துகளை ஒப்பந்தத்தில் எடுத்து பயணிகளுக்கு சேவையாற்றி வருகிறோம். அரசுப் பேருந்தில் என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அதே கட்டணம் தனியாா் பேருந்துகளுக்கும் பொருந்தும் என்றாா் அவா்.