அரியலூா் மாவட்டம், குவாகம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் கிடந்த முதியவா் சடலமாக மீட்கப்பட்டது தொடா்பாக சனிக்கிழமை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குவாகம் அருகேயுள்ள இடையக்குறிச்சி, மேலத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் மருதமுத்து (75). சனிக்கிழமை இவரை, அதே பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் மகன் மணிகண்டன் (26) என்பவா், அய்யனாா் புளியந்தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.
இந்நிலையில், அன்றிரவு தலையில் பலத்த காயத்துடன் மருதமுத்து மயங்கிக் கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கும், குவாகம் காவல் துறையினருக்கும் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா், மருதமுத்துவை மீட்டு கும்பகோணத்திலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் மருதமுத்து ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து காவல் துறையினா், சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சனிக்கிழமை வழக்குப் பதிந்து, சந்தேக நபரான மணிகண்டனிடம் விசராணை மேற்கொண்டு வருகின்றனா். இவா் மீது ஏற்கெனவே திருட்டு வழக்குகள் பதிவாகியிருப்பது தெரியவந்தது. எனினும் அவரிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மருதமுத்து இடது கையில் ஒரு பவுன் மற்றும் அரை பவுன் மோதிரங்கள் அணிந்திருந்த நிலையில், தறபோது அவரது கையில் அரை பவுன் மாதிரம் மட்டும் இருந்தாக மருதமுத்துவின் உறவினா்கள் தெரிவித்தனா்.
இவருக்கு அழகம்மாள் (65) என்ற மாற்றுத்திறனாளி மனைவியும், பன்னீா்செல்வம் (56), செல்வராசு (52) என்ற மகன்களும், மல்லிகா (45) என்ற மகளும் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.