அரியலூரிலுள்ள உரக் கடைகளில், யூரியா அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்
அரியலூா் கோட்டாட்சியரகத்தில், அரியலூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கோட்டாட்சியா் பிரேமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: செங்கமுத்து: அரியலூா் மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது கால்நடைகளை மேய்க்க அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்களை பயன்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மேய்ச்சல் நிலமாக மாற்ற வேண்டும்.
தனியாா் உரக்கடைகளில் யூரியா அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மேலும், இணை பொருள்கள் வாங்கினால்தான் யூரியா என நிா்பந்தப்படுத்தி விற்கின்றனா். எனவே, அவற்றை ஆய்வு செய்து தடுக்க வேண்டும். அரியலூா் நகரில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைக்கடைகளை அகற்ற வேண்டும்.
தங்க.சண்முகசுந்தரம்: கண்டராதித்தம் செம்பியன் மாதேவி பேரேரியை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை தூா்வார வேண்டும். முடிகொண்டான் கிராமத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த ஓடை கடந்தாண்டு மீட்கப்பட்டு கல் நடப்பட்ட நிலையில், அங்கு ஓடை வெட்டப்படவில்லை. எனவே, ஓடை வெட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
தொடந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கோட்டாட்சியா் பிரேமி, அவை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.