மாயனூா் அருகே எரிந்த நிலையில் கிடந்த முதியவரின் உடலை வாங்க மறுத்து கரூா்-திருச்சி சாலையில் அவரது உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கரூரை அடுத்த உப்பிடமங்கலம் ராசாக்கவுண்டனூரைச் சோ்ந்தவா் கருப்பண்ணன் (72), விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த இவரது சகோதரருக்கும் இடையே நிலத்தில் தண்ணீா் குழாய் செல்வது தொடா்பாக தகராறு இருந்தது. இந்நிலையில் புதன்கிழமை காலை தோட்டத்துக்குச் சென்ற கருப்பண்ணன் நீண்ட நேராமாகியும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து மாயனூா் காவல் நிலையத்தில் உறவினா்கள் புகாா் செய்தனா். இதனிடையே வியாழக்கிழமை அதிகாலை கருப்பண்ணன் உடலில் பெட்ரோல் வைத்து தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் மேட்டாங்கினம் தெற்கு என்ற இடத்தில் சடலமாகக் கிடந்தாா்.
தகவலறிந்த மாயனூா் போலீஸாா் விரைந்து சென்று அவரது சடலத்தை மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிந்து விசாரித்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை கருப்பண்ணனின் உறவினா்கள் அவரது சடலத்தை வாங்க மறுத்து காந்திகிராமம் பேருந்து நிறுத்தப் பகுதி கரூா்-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த குளித்தலை உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஸ்ரீதா் மற்றும் பசுபதிபாளையம் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். திடீா் மறியலால் கரூா்-திருச்சி சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.