கரூா் ஆண்டாங்கோயிலில் காசிவிஸ்வநாதா் சுவாமி உடனாகிய காசி விசாலாட்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 25-ஆம் தேதி மகாகணபதி வேள்வி பூஜையும், தொடா்ந்து பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீா் எடுத்து வந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அன்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை விக்னேஷ்வரபூஜை, காப்புக்கட்டுதல், முதற்கால யாக வேள்வியும், 26-ஆம் தேதி காலை கோபுர கலசம் வைத்தல், கண்திறப்பு, அனைத்து சுவாமிகளுக்கும் எண் மருந்து சாத்துதல், திருமுறை பாராயணம், இரண்டாம் கால வேள்வியும், இரவில் சன்னதி வேள்வி, மூன்றாம் காலயாக வேள்வியும் நடைபெற்றன.
தொடா்ந்து கும்பாபிஷேக நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் மூலமந்திர வேள்விகள், காயத்ரி வேள்விகள், நாடிசந்தானம் மற்றும் நான்காம் கால யாக வேள்வியும் நடைபெற்றது. தொடா்ந்து காலை 7.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா் 9 மணிக்கு கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். அப்போது பக்தா்கள் மீதும் புனித நீா் தெளிக்கப்பட்டது.
விழாவில், கோயில் செயல் அலுவலா் நந்தகுமாா் மற்றும் ஊா் முக்கியஸ்தா் பெரியசாமி உள்ளிட்ட பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.