கரூா் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரும், சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தவருமான செல்வராஜ் யாருடைய மிரட்டலுக்கு பயந்து பொய் சொல்கிறாா் எனத் தெரியவில்லை என்றாா் வழக்குரைஞா் வி.சி.கே. பாலகிருஷ்ணன்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். மேலும் 110 போ் காயமடைந்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக ஐ.ஜி. அஸ்ராகா்க் தலைமையிலான சிறப்புக் குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கூட்ட நெரிசலில் அதிகபட்சமாக ஏமூா்புதூரைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா். இவா்களில் நெரிசலில் உயிரிழந்த சந்திரா என்பவரின் கணவா் செல்வராஜ், நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தனது வழக்குரைஞரும், ஏமூா் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவரும், கரூா் தாந்தோனி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான வி.சி.கே.பாலகிருஷ்ணன் உதவியோடு மனுத்தாக்கல் செய்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை செல்வராஜ் சமூகவலைதளத்தில் ஒரு விடியோ பதிவு வெளியிட்டிருந்தாா். அதில், வழக்குரைஞா் பாலகிருஷ்ணன் எனது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறித்தான் கையொப்பம் வாங்கினாா் என குற்றஞ்சாட்டியிருந்தாா்.
இதுதொடா்பாக வழக்குரைஞா் வி.சி.கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: நான் ஊராட்சித் தலைவராக இருந்தபோது, செல்வராஜின் தம்பி முருகேசன் வாா்டு உறுப்பினராக இருந்தாா். இதனால் முருகேசன், என்னிடம் எனது அண்ணன் மனைவி சந்திரா இறப்புக்கான உரிய காரணம் தெரிய வேண்டும், உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக் கோரி வழக்கு தாக்கல் செய்ய உதவி செய்யுங்கள் என கேட்டாா்.
இதனால்தான் செல்வராஜ் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இப்போது யாருடைய மிரட்டலால் அவா் இப்படி பேசுகிறாா் என தெரியவில்லை.
நான் ஏதோ வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி கையொப்பம் வாங்கிவிட்டதாக சமூக வலைதளத்தில் பேசியுள்ளாா்.
செல்வராஜிடம் கையொப்பம் வாங்கியபோது, முருகேசனும் அருகில்தான் இருந்தாா். மற்றபடி இதில் அரசியல் ஏதுமில்லை என்றாா் விசிகே. பாலகிருஷ்ணன்.