பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்திய நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து, பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
வேப்பந்தட்டை வட்டம், வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகள் தமிழ்ச்செல்வி (19). அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமலிங்கம் மகன்கள் கலியமூர்த்தி (41), சின்னதுரை (38). இவர்களுக்கு அருகருகே வயல் உள்ள நிலையில், கடந்தாண்டு மார்ச் 23 ஆம் தேதி தனது வயலில் தமிழ்மணி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அவரது ஆடு அருகிலுள்ள ராமலிங்கத்தின் வயலுக்குச் சென்றதாம்.
இதையறிந்த கலியமூர்த்தி, இவரது மகன் பெரியசாமி, சின்னதுரை ஆகியோர் தமிழ்ச்செல்வி, அவரது தங்கை தனலட்சுமி, தாய் கங்கையம்மாள் ஆகியோரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அரிவாளைக் காட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டனராம். மேலும், தமிழ்ச்செல்வியின் ஆடைகளை இழுத்து அவமானப்படுத்தினராம்.
இதுகுறித்து தமிழ்ச்செல்வி அளித்த புகாரின்பேரின் கொலை முயற்சி, மானபங்கம் மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த அரும்பாவூர் போலீஸார் கலியமூர்த்தி, சின்னதுரை, பெரியசாமி ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் மூவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி விஜயகாந்த், சின்னதுரைக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 16 ஆயிரம் அபாராதம், அதைக் கட்டத்தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், கலியமூர்த்திக்கு 2 ஆண்டு 3 மாதம் சிறைதண்டனையும், ரூ. 11 ஆயிரம் அபராதமும் விதித்து, பெரியசாமியை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து குற்றவாளி கலியமூர்த்தி அபராதத் தொகையைச் செலுத்தி சொந்த ஜாமீனில் வெளிவந்தார். சின்னதுரையை அரும்பாவூர் போலீஸார் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.