பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே மினி பேருந்து கவிழ்ந்து 20 பேர் காயமடைந்தனர்.
பெரம்பலுர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அ. குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிக்கண்ணன் (27). மினி பேருந்து ஓட்டுநரான இவருக்கு வாலிகண்டபுரத்தில் உள்ள வாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.
இத்திருமணத்தில் பங்கேற்க கோபிக்கண்ணனின் உறவினர்கள் சுமார் 40 பேர் வியாழக்கிழமை காலை அ. குடிக்காடு கிராமத்திலிருந்து வாலிகண்டபுரம் கிராமத்துக்கு மினி பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். இந்தப் பேருந்தை நடத்துநர் செல்வராஜ் (34) ஓட்டினார். வி.ஆர்.எஸ் புரம் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த ஆட்டுமந்தைக்கு வழிவிட ஒதுங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்த மினிபேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த அ. குடிக்காட்டைச் சேர்ந்த காந்திமதி (48), நல்லம்மாள் (45), பிரியா (23), சுரேஷ் (30), மகாலிங்கம் (50), மாரியப்பன் (49) உள்பட 20 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்தோரை மீட்டு, பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மங்கலமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். பயிற்சி பெறாத நடத்துநர் பேருந்தை இயக்கியதால் விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.