மாணவர்கள் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளரும், சூழலியல் உயிர்த் தொழில்நுட்பவியல் துறைப் பேராசிரியருமான முனைவர் பாபு ராஜேந்திரன்.
பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ்ரோவர் தன்னாட்சிக் கல்லூரியும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும் இணைந்து நடத்திய இளம் மாணவ அறிவியல் விஞ்ஞானிகளுக்கான 15 நாள் பயிற்சி வகுப்பு நிறைவு விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
மாணவர்கள் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிர்மறை எண்ணங்களுக்கு இடமளிக்கக் கூடாது. நம்மைச் சுற்றியுள்ளவர்களின் சொற்களுக்கு செவிசாய்க்காமல், சுயமுடிவு எடுக்க வேண்டும். எந்தவொரு வாய்ப்பையும் நழுவவிடக் கூடாது. நிகழாண்டுக்கான, இளைஞர்களுக்கான நோபல் பரிசை இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இந்திராணி தாஸ், தனது 17 -வது வயதில் பெற்றிருக்கிறார் என்றார் அவர். தொடர்ந்து, கல்லூரி முதல்வர் வெ. அயோத்தி பேசியது:
அறிவியலும், தொழில்நுட்பமும் இல்லையென்றால் வாழவே முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். நிறைய வசதிகளைத் தந்துகொண்டிருக்கும் விஞ்ஞானத்தை, நாம் சரியான வழித்தடத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அறிவியல் மிகுந்த நுட்பம் வாய்ந்தது. சாதாரண நிகழ்வையும் உற்றுநோக்கும் தன்மை வேண்டும்.
இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற நீங்கள் உந்து சக்தியை பெற்றுள்ளீர். இதை அடிப்படையாகக் கொண்டு, பிற்காலத்தில் சிறந்ததொரு விஞ்ஞானியாக வேண்டும். பெற்றோர்களும், அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் அவர். பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், மாணவர்களால் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த அறிவியல் மாதிரிகளில் சிறந்த குழுக்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை, கல்லூரி துணை முதல்வர் அ. மகேந்திரன், பேராசிரியர்கள் ஜெயந்தி, அனுஷா, அனுசுயா, கோவிந்தராஜ் ஆகியோர் செய்தனர்.
பேராசிரியர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். முனைவர் ம. அகதா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.