பணிப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, ஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்த கிராமச் சுகாதாரச் செவிலியர்கள் பெரம்பலூர் ஆட்சியரகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள புதுநடுவலூர் மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மனைவி மாரியாயி (33).
இவருக்கு ஏற்கனவே 7 பெண் குழந்தைகள் உள்ளனராம். இந்நிலையில் கர்ப்பமடைந்த மாரியாயி கடந்த 24 ஆம் தேதி பிரசவத்துக்காக குரும்பாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றாராம். அப்போது, அங்கு பணியில் இருந்த கிராம சுகாதாரச் செவிலியர் நாகவள்ளி, மாரியாயியை பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினாராம்.
அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இருதய நோயாளி என்பதாலும், ஏற்கெனவே 7 குழந்தைகள் உள்ளதாலும் திருச்சி அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கும் மருத்துவக் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் மதுரை மருத்துவமனையில் இருந்து பிரசவத்துக்கு முன் மாரியாயி வெளியேறிவிட்டாராம்.
இதையறிந்த மருத்துவமனை நிர்வாகம், பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, செவிலியர் நாகவள்ளி, மாரியாயி வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவர் அங்கிருந்தது தெரியவந்தது.
பின்னர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவசர ஊர்தி மூலம் சென்னை மருத்துவமனைக்கு மாரியாயி கொண்டு செல்லப்பட்டார். தகவலறிந்த மாரியாயி கணவர் குமார், சென்னை மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்த செவிலியர் நாகவள்ளியை தகாத வார்த்தைகளால் திட்டி அவரைத் தாக்கினாராம். இதுகுறித்து மருத்துவத் துறையினர் மூலம் போலீஸாருக்கு அளித்த புகாரின்பேரில், குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், பெரம்பலூர் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் நடைபெற இருந்த மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு சுகாதார செவிலியர் சங்கத்தினர், கூட்டத்தைப் புறக்கணித்து செவிலியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர், போலீஸார் மேற்கொண்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்ட செவிலியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.