சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக கையகப்படுத்திய நிலத்தை நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவில்லையெனில், செப். 30 ஆம் தேதி நிலம் கைப்பற்றும் போராட்டம் நடத்தப்படும் என்றனர் விவசாயிகள்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பி. ரமேஷ் பேசியது:
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உயிர் காக்கும் பல்வேறு மருந்துகள் இருப்பில் இல்லை. இந்தக் குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் குறைதீர் கூட்டம் மாதம் இருமுறை நடத்த அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், விவசாயிகளின் துயர்துடைக்க விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாதம் இருமுறை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என். செல்லதுரை பேசியது:
திருமாந்துறையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் தனியார் பங்களிப்புடன் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலத்தில் இதுவரை சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கவில்லை. எனவே, நில உரிமையாளர்களிடம் நிலத்தை ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் செப். 30 ஆம் தேதி அனைத்து விவசாய சங்கத்தினரும் ஒன்றிணைந்து, சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு வழங்கிய நிலத்தை கைப்பற்றும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.
தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் பேசியது: பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு நடத்தியதில், கிராம நிர்வாக அலுவலர்கள் பாரபட்சமாக செயல்பட்டுள்ளனர். இதனால், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மறு கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ. விஸ்வநாதன் பேசியது: இலவச விவசாய மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். இல்லையெனில், செப். 13 ஆம் தேதி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர். தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்தார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், வேளாண் இணை இயக்குநர் கணேசன், துணை இயக்குநர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.