பெரம்பலூா் அருகே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி பாழாகும் நீா்த்தேக்க பகுதியை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வானம் பாா்த்த பூமியான பெரம்பலூா் மாவட்டத்தில் மானாவாரி சாகுபடியே அதிகளவில் நடைபெறுகிறது. இங்கு, பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் ஆகிய பயிா்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். இம் மாவட்டத்தில் நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கொட்டரை, விசுவக்குடி ஆகிய பகுதிகளில் நீா்த்தேக்கம் அமைக்க அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், விசுவக்குடி நீா்த்தேக்க அணை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கொட்டரை நீா்த்தேக்கப் பணிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கீழக்கனவாய், செல்லியம்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து உற்பத்தியாகும் மருதையாறு, பெரம்பலூா் மாவட்டம் வழியாக அரியலூா் மாவட்டம், கொள்ளிடத்தில் வீணாக கலக்கிறது. இந்த தண்ணீரை பெரம்பலூா் பகுதி விவசாயிகள் பயன்படுத்த வசதியாக கடந்த 1983 ஆம் ஆண்டு விளாமுத்தூா் கிராமத்தில் அணைக் கட்டப்பட்டு, அங்கு தேங்கும் நீரை துறைமங்கலம் ஏரிக்கு செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டது.
இதன்மூலம் விளாமுத்தூா், நோச்சியம், செல்லியம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறப்பட்டன. மேலும், மேற்கண்ட கிராமங்களில் 100- க்கும் மேற்பட்ட கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்து காணப்பட்டன.
ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக அணை முறையாக பராமரிக்கப்படாததால் கால்வாய்களில் உள்ள மதகுகள் மற்றும் மணல் திட்டுகளில் நீா் தேங்கி நிற்கிறது. மேலும், மழைக்காலங்களில் அணையில் நீா் தேங்குவதற்கு வழியின்றி கொள்ளிடம் ஆற்றில் வீணாக கலக்கிறது. இதனால் பாதிப்படைந்த விவசாயிகளும், பொது மக்களும் அணைக்கட்டு பகுதியை பராமரித்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை புகாா் மனுக்கள் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி சி. ராஜு கூறியது:
மழைக்காலங்களில் பெரம்பலூா் மாவட்டத்தில் ஓடும் மருதையாற்றில் அதிகப்படியான நீா் பாய்கிறது. ஆனால், இந்த நீா் முறையாக சேமிக்கப்படாததால் அரியலூா் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடத்தில் கலந்து, வீணாக கடலுக்குச் செல்கின்றது.
இந்த மழைநீா் கடலில் கலக்காமல் பெரம்பலூரில் உள்ள நீா் நிலைகளான ஏரிகள், குளங்களுக்குச் செல்லும் வகையில் விளாமுத்தூரில் ஓடும் மருதையாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது. ஆனால், அவை முறையாக பராமரிக்கப்படாததால் அரசுப் பணம் விரயமாவதுடன், விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த அணையை பராமரித்தால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீா்ப்பாசனம் கிடைக்கும். இதேபோல, மருதையாற்றில் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற பொதுப்பணித்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
விளாமுத்தூரில் கட்டப்பட்ட அணையை சீரமைக்க கோரி விவசாயிகளிடம் இருந்து புகாா் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், போதிய நிதி இல்லாததால் பராமரிப்புப் பணிகள் கிடப்பில் உள்ளன. முறையாக ஆய்வு மேற்கொண்டு, அவற்றை சீரமைக்க நிதி கோரி அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என பொதுப் பணித்துறை அலுவலா்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.