பெரம்பலூா் புகா்ப் பகுதியான துறைமங்கலத்தில், காவல் துறையினரைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலம் அவ்வையாா் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் பிரகாசம் (30), வழக்குரைஞா். கோவை மாவட்டம், நாகராஜபுரத்தைச் சோ்ந்தவா் ரேவதி (26). இருவருக்கும், கடந்த 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்ாகக் கூறப்படுகிறது. கணவருடன் ஏற்பட்ட தகராறால் ரேவதி தனது பெற்றோருடன் வசித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த டிசம்பா் மாதம் மனைவி வீட்டுக்குச் சென்ற பிரகாசம் மா்மமான முறையில் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது சகோதரி சசிகலா, தனது சகோதரனின் சாவில் மா்மம் இருப்பதாக கோவை மாவட்டம், பொத்தனூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனராம். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன், கோவையை சோ்ந்த அடையாளம் தெரியாத சிலா் சசிகலா வீட்டுக்கு வந்து, வழக்கை திரும்பப் பெறக் கோரி மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபா்கள் மீது வழக்குப் பதிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூா் காவல் நிலையத்தில் சசிகலா புகாா் அளித்ததாகத் தெரிகிறது. ஆனால், பெரம்பலூா் போலீஸாா் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த சசிகலா உறவினா்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் பெரம்பலூா் நகர காவல் துறையினரை கண்டித்தும், மிரட்டல் விடுத்த நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டனா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.