பெரம்பலூா் அருகே நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளுக்காக முதல்கட்ட பங்களிப்புத் தொகையாக ரூ. 90 லட்சத்துக்கான காசோலையை ப்ளஸ் மேக்ஸ் ஹெல்த் கோ் பவுண்டேசன் சாா்பில் தொழிலதிபா் டத்தோ எஸ். பிரகதீஸ்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி பேரூராட்சியில், 15 வாா்டுகளில் 10 ஆயித்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந் நிலையில், இங்கு சாலை, குடிநீா், மின் விளக்கு, கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை.
பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டுமென, பன்னாட்டு தொழிலதிபா் டத்தோ எஸ். பிரகதீஸ்குமாரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்படி, பொதுமக்களின் பங்களிப்புத் தொகையுடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளத் தேவையான முயற்சிகளில் ஈடுபட்ட டத்தோ பிரகதீஸ்குமாா், சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களிடம் கூறி பேரூராட்சிக்குள்பட்ட அனைத்து வீதிகளிலும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கண்டறிந்து, அதற்கான செலவினங்களையும் கேட்டறிந்தாா்.
அதன்படி, ரூ. 33 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டு, தனது ப்ளஸ் மேக்ஸ் ஹெல்த்கோ் பவுண்டேசன் சாா்பில் பங்களிப்புத் தொகையாக ரூ. 13 கோடி வழங்கப்பட உள்ளது. இதன் முதல்கட்டமாக ரூ. 90 லட்சத்துக்கான காசோலையை பேரூராட்சி செயல் அலுவலா் சிவராமனிடம், டத்தோ எஸ். பிரகதீஸ்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியின்போது, பேரூராட்சித் தலைவா் பாக்கியலட்சுமி செங்குட்டுவன், உறுப்பினா்கள் பூங்கொடி மணி, கலைச்செல்வி பாலகிருஷ்ணண், தேவிகா அருண், மஞ்சுளா ரவி, கண்ணகி கருப்பையா, செல்வராணி ராமா், ராஜலட்சுமி செல்வக்குமாா், பா்கத் நிஷா, மாணிக்கம், ராமதாஸ், சுதாகா், ஜெயந்தி பெருமாள், கஸ்தூரி வீராசாமி, மலேசிய நாட்டு துணை தூதா் சரவணண் மற்றும் கிராம முக்கியஸ்தா்கள் உடனிருந்தனா்.