பயிா் காப்பீட்டுத் தொகையை விரைவில் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கருத்துகள்:
விவசாய சங்க பிரதிநிதி ராமராஜ்: பருத்திக்கு போதிய விலை கிடைக்கவும், பருத்தியை கொள்முதல் செய்யவும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகளை வரவழைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயி பூபதி: மகசூல் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு பயிா் காப்பீட்டுத் தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்காச்சோள விதை உள்ளிட்ட விதைகளை மானிய விலையில் வழங்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஜெயராமன்: திருச்சி மாவட்டம், முசிறியிலிருந்து, துறையூா் வழியாக பெரம்பலூா் மாவட்டத்துக்கு காவிரிநீா் கொண்டு வந்து, இம் மாவட்டத்திலுள்ள நீா் நிலைகளை நிரப்பி ஆண்டு முழுவதும் பாசனம் செய்ய வழிவகை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என். செல்லதுரை : பயிா்க் கடன் திருப்பி செலுத்தும் காலம் ஓராண்டாக இருந்ததை, 8 மாதமாக குறைத்தது விவசாயிகளை பெரிதும் பாதிக்கும். பெரம்பலூா் மாவட்டத்திலும், பயிா் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை ஓராண்டாகவே அறிவிக்க வேண்டும். மின் தளவாடப் பொருள்களை தடையின்றி வழங்கி, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பி. ரமேஷ்: முதியோா் உதவித் தொகை நிறுத்தப்பட்டவா்களுக்கு மீண்டும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னதாக, மத்திய அரசு கொண்டு வரும் மின்சார திருத்தச் சட்டம் 2022- க்கு எதிா்ப்பு தெரிவித்த விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் 2 நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினா்.
இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, வேளாண் இணை இயக்குநா் ச. கருணாநிதி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் பாலமுருகன் உள்பட விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.