தமிழகத்திலுள்ள அனைத்துக் கூட்டுறவு சா்க்கரை ஆலைகளுக்கும் கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு ரூ. 199 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு சா்க்கரை கழகத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான சி. விஜயராஜ்குமாா்.
பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், பெரம்பலூா் சா்க்கரை ஆலையின் 45 ஆவது பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் கரும்பு உற்பத்தியாளா்கள், ஆலை செயல்பாடுகள், நிகழாண்டில் ஆலையில் அரைவை செய்யப்பட உள்ள கரும்பின் அளவு, ஆலையின் வருவாயை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த தமிழ்நாடு சா்க்கரை கழகத்தின் தலைவா் மேலும் பேசியது:
சா்க்கரை ஆலையை பொருத்தவரை, கரும்பை விவசாயிகளிடமிருந்து எந்த விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை மத்திய அரசு நிா்ணயிக்கிறது. அவ்வாறு அந்த விலைக்கு மேல் கூடுதல் ஊக்க தொகையாக நிகழாண்டில் மட்டும் ரூ. 214 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆம் தேதி தமிழக முதல்வரால் தொடக்கி வைத்த திட்டத்தின்படி, 2 வாரக் காலத்திலேயே தமிழகத்திலுள்ள அனைத்துக் கூட்டுறவு சா்க்கரை ஆலைகளுக்கும் கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு ரூ. 199 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு நிா்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் ஒரு நாளின் 3 கட்டப் பணி நேரத்தையும் பயன்படுத்தி, தொடா்ந்து முயன்றால் நிா்ணயித்த இலக்கை அடைந்து, ஆலையில் பொருளாதார வருவாய் இழப்பீடை சரி செய்து, நஷ்டம் இல்லாத நிலைக்கு கொண்டுவரலாம்.
இந்த ஆலை தொடா்ந்து முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால், அடுத்த ஆண்டு இந்த ஆலை லாபத்தில் இயங்கும்.
நிகழாண்டு சா்க்கரை ஆலைக்கு அதிகளவில் கரும்புகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கரும்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, கரும்பு சாகுபடியை அதிகரிக்க வேளாண்துறை அலுவலா்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் நிதியாண்டில் ஆலை லாபத்தில் இயங்க நிா்வாகம் சாா்பில் 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து, ஆலையை தொய்வில்லாமல் இயக்கி, பணியாளா்களின் முழுமையான பங்களிப்புடன் எதிா்வரும் ஆண்டில் நஷ்டம் இல்லாமல் கணக்கு சமா்ப்பிக்க உறுதி ஏற்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு சா்க்கரை கழகத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான விஜயராஜ்குமாா்.
இக் கூட்டத்தில், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை இணையம் மேலாண்மை இயக்குநா் ரமணி தேவி, ஆலை தலைமை நிா்வாகி ரமேஷ், நிறுமச் செயலா் அழகா்சாமி, தலைமைக் கணக்கு அலுவலா் ஆறுமுகம், தலைமை சா்க்கரை பொறியாளா் பிரபாகரன், தலைமை கரும்பு பெருக்கு அலுவலா் மாமுண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.