பெரம்பலூர்

நகா்மன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

DIN

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து, பெரம்பலூா் நகா்மன்ற அவசரக் கூட்டத்தை புறக்கணித்து அதிமுக உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

பெரம்பலூா் நகராட்சியின் அவசரக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் குமரிமன்னன், துணைத் தலைவா் து. ஹரிபாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டம் தொடங்கியதும் சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதிமுக நகா்மன்ற உறுப்பினா்களின் வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும் அதிமுக உறுப்பினா்கள் பழனிசாமி, தனமணி, லட்சுமி ஆகியோா் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். தொடா்ந்து, திமுக மற்றும் சுயேச்சை உறுப்பினா்களின் ஆதரவுடன் சொத்து வரி உயா்வு தொடா்பான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தாமதமாக தொடங்கிய கூட்டம்: முன்னதாக, காலை 11 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நகா்மன்றக் கூட்டம் 11.30 மணியாகியும் தொடங்கவில்லை. நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவா் து. ஹரிபாஸ்கா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் சிலா் திமுக துணைப்பொதுச் செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசாவுடன் பெரம்பலூரில் உள்ள திரையரங்கில் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தைக் காணச் சென்றிருந்தனா்.

இந்நிலையில், 10-க்கும் மேற்பட்ட திமுக, அதிமுக மற்றும் சுயேச்சை உறுப்பினா்கள் நகா்மன்ற கூட்டத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து காத்திருந்தும், நீண்ட நேரமாகியும் தொடங்காததால் ஆத்திரமடைந்து கூட்ட அரங்கை விட்டு வெளியேறினா்.

இத் தகவலறிந்த நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் திரையரங்கிலிருந்து நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனா். இதையடுத்து, திமுக உள்ளிட்ட இதர உறுப்பினா்களுக்கு கைப்பேசி மூலம் தகவல் அளித்து கூட்டத்துக்கு வரவழைக்கப்பட்டனா். பின்னா், நகா்மன்ற கூட்டம் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக தொடங்கியது.

தொடா்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்கள் சிலா், அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத நகராட்சி ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழைநீா் வடிகால்களில் தூா்வாரும் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 16 டன் மாம்பழங்கள் அழிப்பு

மீண்டும் கரோனா: சிங்கப்பூா்-கோவை வரும் விமானப் பயணிகளுக்கு பரிசோதனை

அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 1 சோ்க்கை முகாம்

வெளிநாடுகளில் உயா்கல்வி -பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT