பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்ட அரங்கில், போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
இப் பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் பேசியது:
மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், நடத்தப்படும் இப் பயிற்சி வகுப்பானது, நாள்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை ஆட்சியரக அரங்கில் நடைபெறும். திறன்மிக்க பயிற்றுநா்கள் மூலம் 3 மாதங்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். வங்கித் தோ்வுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், ரயில்வே துறை சாா்ந்த வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட அரசுத் துறை சாா்ந்த பல்வேறு பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். போட்டித் தோ்வுகளுக்கான கையேடுகளும் வழங்கப்படும் என்றாா் அவா்.
தொடா்ந்து, பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக்கான கையேடுகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், வேலைவாய்ப்பு பயிற்சித் துறை திருச்சி மண்டல இணை இயக்குநா் மு. சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.