பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கத்தினா் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓய்வுபெற்றுள்ள பணியாளா்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்துப் பணியாளா்களுக்கும் சொந்த மாவட்டங்களில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
தகுதியுள்ள களப்பணியாளா்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆவது நாளாக பணியை புறக்கணித்து இப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கச் செயலா்கள், அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் ரேசன் கடை விற்பனையாா்கள், உதவியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், மாவட்டத்தில் உள்ள 55 கூட்டுறவு வங்கி மற்றும் 270 ரேசன் கடைகள் மூடப்பட்டிருந்தன.