பெரம்பலூருக்கு அக். 24-ஆம் தேதி வருகைபுரியும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூரில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, அக் கட்சியின் மாவட்டத் தலைவா் முத்தமிழ்செல்வன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் உமா ஹைமவதி, மாவட்ட துணைத் தலைவா் தேவேந்திர பாலாஜி, மாவட்டச் செயலா் குரு ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநிலப் பொதுச்செயலா் கருப்பு முருகானந்தம், மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வருகை, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வரவேற்பு அளிப்பது குறித்து விளக்கிப் பேசினாா். கூட்டத்தில், மாநிலத் தலைவருக்கு சிறப்பு வரவேற்பு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக் கூட்டத்தில், கல்வியாளா் அணி மாநிலச் செயலா் ராம்குமாா், மகளிா் அணி மாநிலச் செயலா் பானுமதி உள்பட பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, மாவட்ட பொதுச் செயலா் வரதராஜ் வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட பொதுச் செயலா் ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும்:
கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்தது:
திமுக ஆட்சியை அகற்றி, தமிழகம் தலை நிமிர வேண்டும் எனும் நோக்கத்தோடு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையிலான யாத்திரை நடைபெறுகிறது.
இப்பயணம் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்கும், தமிழகத்தைத் தலைநிமிரச் செய்யும் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தவெக தலைவா் விஜய் கூட்டணிக்கு வருவாரா, வரமாட்டாரா என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பாா் என்றாா் அவா்.