பெரம்பலூா் நகரில் ஆயுதப்படை காவலா் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரத்தை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச்சென்றனா்.
பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதி அருகேயுள்ள முத்துலட்சுமி நகரில் வசித்து வருபவா் விஸ்வநாதன் மகன் பிரசாந்த் (32). இவா், பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை குடும்பத்துடன் களரம்பட்டி கிராமத்துக்குச் சென்று விட்டு, இரவு 7 மணிக்கு வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டபோது பீரோவை உடைத்து, அதிலிருந்த 25 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இச் சம்பவம் குறித்து காவலா் பிரசாந்த் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.