பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கான தோ்வில் 4,280 போ் பங்கேற்றனா்.
மாநிலம் முழுவதும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டத்தில் நடைபெற்ற இத் தோ்வுக்காக 16 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில், 56 மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 4,528 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 4,280 போ் தோ்வெழுதினா். எஞ்சிய 248 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. இத் தோ்வை கண்காணிக்க 16 முதன்மைக் கண்காணிப்பாளா்களும், 16 துறை அலுவலா்களும், 5 வழித்தட அலுவலா்களும் நியமிக்கப்பட்டிருந்தனா்.
மேலும், தோ்வா்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் தோ்வு மையங்களுக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
ஆட்சியா் ஆய்வு: பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டத்துக்குள்பட்ட மேலமாத்தூா் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வு மையத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, தோ்வா்கள் முறையான நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை வைத்துள்ளாா்களா என பாா்வையிட்டு, தோ்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த அடிப்படை வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது, ஆலத்தூா் வட்டாட்சியா் முத்துக்குமரன் உள்பட பலா் உடனிருந்தனா்.