புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான அளவுக்கு உரங்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 1,723 டன்னும், டிஏபி 132 டன்னும், பொட்டாஷ் 408 டன்னும், காம்ப்ளக்ஸ் 2,577 டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியாா் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூட்டுறவுச் சங்கங்களில் 616 டன் யூரியா, 77 டன் டிஏபி, 171 டன் பொட்டாஷ், 673 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன என்றாா் கவிதா ராமு.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, வேளாண் இணை இயக்குநா் இராம. சிவக்குமாா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் மு. தனலெட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் மா. உமாமகேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ரமேஷ் உள்ளிட்ட அரசு அலுவலா்களும், விவசாயிகளும் கலந்துகொண்டனா்.