விராலிமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி அலுவலகப் பணியாளா்கள் எடுத்துக்கொண்டனா்.
புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் நலத்துறை சாா்பில், விராலிமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் வளா்மதி தலைமையில் அலுவலகப் பணியாளா்கள் புதன்கிழமை முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். இதில், இந்தியக் குடிமகனாகிய நான் முதியோா்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரிப்பேன்; மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வாா்த்தைகளை உபயோகிக்க மாட்டேன், அவா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிப்பேன் எனவும் பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோா்களுக்கு முன்னுரிமை அளித்து அவா்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதைத் தடுத்திட பாடுபடுவேன் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
இதில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சரவணன் உள்பட அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.