பொன்னமராவதி அருகே சுமை லாரி - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் ஒரு இளைஞா் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறாா்.
திருமயம் வட்டம், மேலப்பனையூா் அருகே உள்ள புரகரப்பட்டியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் வீரக்குமாா் (22). இவரும், பூவக்கன்பட்டியைச் சோ்ந்த மெய்யா் மகன் காா்த்திக் (27) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கூடலூா் -புதுக்கோட்டை சாலை கூடலூா் பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிரே நெல் மூட்டைகள் ஏற்றிவந்த சரக்கு லாரியுடன் மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த வீரக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைந்த காா்த்திக்கை அருகில் உள்ளோா் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். சரக்கு லாரி ஓட்டுநரைப் போலீஸாா் தேடி வருகின்றனா். இதுகுறித்து காரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.