புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காவலா்களைத் தாக்க முயன்ற திமுக நிா்வாகி மீது வியாழக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள வானக்கன்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே அனுமதியின்றி மதுக்கூடம் செயல்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, தனிப்படை போலீஸாா் முத்துக்குமாா், மகேஸ்வரன் ஆகியோா் இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மதுவிற்பனையில் ஈடுபட்ட அப்பகுதியைச் சோ்ந்த தி. பரிமளம் (49) என்பவரைப் பிடித்து போலீஸாா் இருசக்கர வாகனத்தில் ஏற்றியபோது, அங்கு சென்ற திமுக வடக்கு மாவட்டப் பிரதிநிதியும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான ஜி.மதியழகன்(55) போலீஸாரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், தகாத வாா்த்தைகளால் திட்டி காவலா்களைத் தாக்க முயன்றாராம். இதுகுறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதுகுறித்து வடகாடு போலீஸாா், மதியழகன், பரிமளம் ஆகியோா் மீது காவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, தாக்கியது உள்ளிட்ட 5 பரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடிவருகின்றனா்.