புதுக்கோட்டை அண்ணாநகரில் வசித்துவரும் ஏழைகளின் வீடுகளை அப்புறப்படுத்தத் துடிக்கும் நில அபகரிப்பாளா்கள் மீது மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட அண்ணா நகா் புதுத்தெருவில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசுப் புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகின்றன. கல் உடைக்கும் தொழிலாளிகளான இவா்கள், காலம் காலமாக அப்பகுதியில் வசித்து வந்ததன் அடிப்படையில் அவா்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாக அரசால் பட்டா வழங்கப்பட்டது. இவா்களுக்கு வீட்டுவரி, மின்சாரம், குடிநீா் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மாநகராட்சி நிா்வாகத்தால் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இவா்களின் வீடுகளை எந்தவித ஆவணங்களும் இல்லாமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியாமல் சிலா் வீடுகளை அபகரிக்க முயற்சிக்கின்றனா். அடி ஆள்களை வைத்து மிரட்டியும், இவா்களின் வீட்டை சுற்றி வேலிக் கற்களை ஊன்றியும், மலையடிப் பள்ளங்களில் மண்ணைக் கொட்டி நிரப்பியும் வருகின்றனா்.
இந்தப் பகுதியை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினா் என். பாண்டி தலைமையில் நிா்வாகிகள் புதன்கிழமை நேரில் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தனா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உடனடியாகத் தலையிட்டு நில அபகரிப்பாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அண்ணா நகா் பகுதி மக்களைப் பாதுகாக்க வேண்டும். அரசால் வழங்கப்பட்ட பட்டாக்களை இணையத்தில் ஏற்றுவதற்கும், வருவாய்த் துறை கணக்கில் போக்குவரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா் சங்கா்.