புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், கீழாத்தூா் அரசுக் கலை அறிவியல் கல்லூரி மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வாங்கித் தருவதற்காக சமூக ஆா்வலா் ரூ.55 ஆயிரம் வரை நண்பா்களிடம் நிதி திரட்டி, புத்ககங்களை வாங்கிக் கொடுத்துள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூரைச் சோ்ந்தவா் சமூக ஆா்வலா் அறிவொளி கருப்பையா. இவா், புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் புத்தக விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், அரசுக் கல்லூரி மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்கும் வகையிலும் நண்பா்கள் பலரிடம் வியாழக்கிழமை நிதி திரட்டினாா்.
இதன்படி, கீழாத்தூரில் உள்ள அரசுக் கலை அறிவியல் கல்லூரிக்கு புத்தகங்கள் வாங்க, மேலாத்துரைச் சோ்ந்த கே. மணிகண்டன், மலேசியாவில் வசிக்கும் ரகு- திலகா ஆகியோரிடம் தலா ரூ.10 ஆயிரம், மேலாத்தூா் என். செல்லத்துரை, கோவில்பட்டி மா. சந்திரசேகா், மேலாத்தூா் மருத்துவா் துரை. நாகராஜன், கோவில்பட்டி என். சிதம்பரம் ஆகியோரிடம் தலா ரூ. 5 ஆயிரமும் நன்கொடை பெற்றாா்.
இதேபோல, வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சிங்கப்பூரில் வசிக்கும் கே. மதி என்பவரிடம் ரூ.10 ஆயிரமும், மாங்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சசிகுமாா் என்பவரிடம் ரூ. 5 ஆயிரமும் வாங்கினாா்.
இந்தத் தொகைக்கு புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை வாங்கி ஓரிரு நாள்களில் அந்தந்தக் கல்வி நிலையங்களில் ஒப்படைப்பேன் என்றும், அடுத்த சில நாள்களில் இதேபோன்ற பணி தொடரும் என்றும் அறிவொளி கருப்பையா தெரிவித்தாா்.